பகுதி நேர's image
5 min read

பகுதி நேர

S. Abdul RahmanS. Abdul Rahman
0 Bookmarks 146 Reads0 Likes

பகுதி நேர முஸ்லிம்
சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!
பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!
ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது
இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்
மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்
ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
‘டக்-ஆஃப்-வார்’
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்
மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?
இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?
நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்
உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன
இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்
சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்
உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
‘பயங்கரவாதி’ என்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்
‘முஸ்லிம்’ என்ற
‘லேபிள்’ மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
‘ஜிஹாத்’ என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்
மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?
வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை
முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்
மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்
வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்
தாடி வளர்ப்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
‘தக்வா’ வை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்
தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது
லுங்கியைக்
கணுக்காலுக்கு மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
‘நஜீஸ்’ ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்
உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்
அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?
சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்
பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா…?

 

No posts

Comments

No posts

No posts

No posts

No posts