கவியரங்கக்'s image
8 min read

கவியரங்கக்

S. Abdul RahmanS. Abdul Rahman
0 Bookmarks 402 Reads0 Likes

கவியரங்கக் கவிதை
தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை
தாள் கண்டால் குனிந்து
தலை வணங்கும் பேனா
உன் தாள் பணியும்
உபதேசம் பெற்ற பின்னர்
எழுத்தல்ல இறைவா
இவையெல்லாம்
என் எழுதுகோல் செய்த
‘சஜ்தாவின்’ சுவடுகள்
(சஜ்தா – சிரம் பணிதல்)
உன் பெயரில் ஊற்றெடுத்து
ஓடுகிறேன் நதியாக
கலப்புக்கும் நீயே
கடலாகி நில்
எண்ணுவது உன்னையே
எழுதுவது உன்னையே
உண்ணுவது உன்னையே
உயிர்ப்பதும் உன்னையே
என்னை உன் கையில்
எழுதுகோலாய் ஏந்தி
நின்னையே நீ எழுதிக்கொள்
நாமோ
பாவலர் உமரின்
பரம்பரையில் வந்தவர்கள்
சேகுனாப் புலவரின்
செல்லக் குழந்தைகள்
பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்
காசிம் புலவரின்
கால்வழித் தோன்றல்கள்
வண்ணக் களஞ்சிய
வாரிசானவர்
குலாம் காதிரின்
குலக் கொழுந்துகள்
செய்குத் தம்பியின்
சின்னத் தம்பிகள்
ரகுமான் என்றால்
இது என்ன ரக மான் என்பார்
பொய்மான் பின்னால்
போனவன் அல்ல
நான் ‘ஈமான்’ பின்னால்
ஏகும் ரகுமான்
இதுவரை ஒட்டடை அடிக்கக்
கோல் ஏந்தினோம்
இன்றோ நான்
ஓர் ஒட்டடையை புகழக்
கோல் ஏந்தினேன்
அன்றொரு நாள் என் வீட்டில்
ஒட்டடை அடிக்கக் கோலெடுத்து நின்றேன்
மூலையில் ஒரு சிலந்தி வலை
அடடா என்ன அழகு
கவிதை மனம் அந்த வலையில்
சிக்கிக் கொண்டது
அழகும் ஒரு வலைதான் – அதனால் தான்
நாமெல்லாம் அகப்பட்டு
கொள்கிறோம் அதற்குள்ளே
உலகத்தை பார்க்கிறேன்
எத்தனை சிலந்திகள்
இதோ இரவு
கறுப்பு இழைகளால் வலை பின்னுகிறது
வலையில் சிக்கித் துடிக்கின்றன
நட்சத்திர ஈக்கள்
இதோ
இருட்டில் ஒருத்தி
ஒப்பனையால் வலை விரித்து
இரைக்காகக் காத்திருக்கிறாள்
பாவம் தானே இரையாகிறாள்
அதோ சூரியன்
கிரணங்களால் வலை பின்னுகிறான்
இருளைப் பிடித்து
உண்பதற்கு
அதோ அரசியல் மேடையில் ஒருவன்
வார்த்தைகளால் வலை பின்னுகிறான்
எதிரே அப்பாவி இரைகள்
பிரபஞ்ச வலையைப் பின்னிவிட்டு
மறைந்து உட்கார்ந்திருக்கிறானே
அவனும் ஒரு சிலந்தி தான்
அவனுடைய இரை நாம் தான்
அவனே படைத்து
அவனே உண்ணும் வரை
எழுதுகோல் ஏந்துகிறவன் நான்
ஒட்டடைக் கோல் ஏந்தியபோதும்
ஊறியது கற்பனை
சிலந்தி வலை பின்ன
சிலந்தியைப் பற்றி நான்
சிந்தனை வலை பின்னி நின்றேன்
அற்பப் பிராணியா சிலந்தி இல்லை
அற்புதப் பிராணி நம்முடைய
வீட்டுக்குள் வீடு கட்டும்
விந்தைப் பிராணி
இதற்குத்தான் எவ்வளவு தன்மானம்
நம்மைப் போல்
அந்நியப் பொருள்களால் வீடு கட்டாமல்
தன் சொந்தப் பொருளாலல்லவா
வீடு கட்டுகிறது
வாயால் ஆகாயக் கோட்டைகளை
கட்டும் மனிதர்களை விட
இச்சிலந்தி உயர்ந்தது
இதுவும் வாயால்தான் கட்டுகிறது
ஆனால் உண்மையாகவே
ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறது
உணவு, உடை, உறையுள்
இந்த மூன்றையும்
மனிதன் தனித்தனியாக
தேட வேண்டியிருக்கிறது
சிலந்திக்குத்தான்
எத்தனை சாமர்த்தியம்
நூலாலேயே ஒரு
வீடு கட்டிவிடுகிறது அந்த
வீட்டாலேயே உணவையும்
பெற்று விடுகிறது
இந்தச் சிலந்தி
வாயால் பூ வரையும்
ஓவியனா இல்லை
சுவருக்கே ஆடை கட்டும்
பைத்தியமா?
சிலந்திக்கு மட்டும் என்ன
இவ்வளவு அழகிய வாந்தி
எவ்வளவு நூல் நூற்றாலும்
இப்பஞ்சு குறைவதே இல்லை
எங்கள் இதயம்
இரண்டு குகைகளை மறந்து விடாது
ஒன்று ‘ஹிரா’
வெளிச்சம் பிரசவமான விடுதி
மற்றொன்று ‘தௌர்’
அந்த வெளிச்ச தீபம்
அணைந்து விடாமல்
காப்பாற்றிய கல் சிம்னி
‘தௌர்’ குகையே
கல் கூடாரமே
சரித்திரத்தில் எத்தனையோ
தங்குமிடங்களைப் பார்த்திருக்கிறோம்
ஆனால்
சரித்திரத்தில் தங்கிவிட்ட
தங்குமிடம் நீ மட்டும்தான்
‘தௌர்’ குகையே
கல் வாயே
அன்று எவ்வளவு பெரிய ரகசியத்தை
நீ மறைத்து வைத்திருந்தாய்
எங்கே நீ உளறி விடுவாயோ
என்று பயந்துதான்
சிலந்தி உன் உதடுகளைத் தைத்ததோ
சிலந்தியே
இரையைப் பிடிப்பதற்குத்தான்
நீ வலை பின்னுவாய்
ஆனால் அன்று
மக்க நகரத்து
மிருகங்களின் இரையைக்
காப்பாற்றுவதற்கல்லவா
நீ வலை பின்னினாய்
உலகத்தின் ஒட்டடைகளை
அழிக்க வந்த இஸ்லாத்தில்
சிலந்தியே நீ அன்று கட்டிய
வலையை மட்டும்
நாங்கள் அழிக்க விரும்பவில்லை
ஏனென்றால்
ஒட்டடைக் கோலையே காப்பாற்றிய வலை
உன் வலை தான்
மீன் பிடிப்பதற்காக வலை விரிப்பார்கள்
ஆனால் நீயோ ஒரு மீன்
எங்கள் மீன் அல் அமீன்
தப்புவதற்கல்லவா வலை விரித்தாய்
சிலந்தியே அன்று மட்டும்
உன் வலை கொசுவலையாக இருந்தது
சித்தம் மகிழும் செம்மல் நபியின்
ரத்தம் குடிக்க வந்த
குரைஷிக் கொசுக்களை
அண்டாமல் விரட்டியதால்
அகமது நபியின்
ஆள் மயக்கும் அழகு கண்டால்
அகம் அது மயங்கும்
முகமது நபியின்
முத்து நிலா முகம் கண்டால்
மூ உலகும் தான் மயங்கும் என்று
அவர் முகமது மறைக்க
ஒரு முத்திரை போட்டாயோ
நிர்வாண உலகத்திற்கு
ஆடையாய் வந்தவரைப் பாராட்ட
பொன்னாடை நெய்து
போர்த்தினாயோ இல்லை
குபுரியத்திற்கு (குபுரியம் – இறை மறுப்பு)
கபன் நெய்யத் தொடங்கினாய்
(கபன் – இறந்த உடலை மூடும் தையலில்லாத வெண்ணிற ஆடை)
இறைவன் தந்த நூல் மறை நூல்
உன் நூலோ மறை கொணர்ந்த
தூதரை மறைத்த நூல்
அன்று உன் மறை நூலால்
இறைவனின் மறை நூலையே
காப்பாற்றிவிட்டாய்
இறைவா
வீடுகளிலேயே
பலவீனமான வீடு
சிலந்தியின் வீடுதான் என்று
உன் திருமறையில் கூறினாய்
ஆனால் என்ன அதிசயம்
அந்த பலவீனமான வீடு
எவ்வளவு பலமான
கோட்டையை கட்டிவிட்டது
இறைவா நீ நினைத்தால்
ஒரு மேலாம் படையைக் கூட
ஒரு நூலாம் படையால்
தடுத்து நிறுத்தி விடுகிறாய்
சிலந்திகள்
ஒட்டடைக் கோலால் அழியும்
நீயோ ஓர் ஒட்டடைக் கோலை
காப்பாற்றிய சிலந்தி
இருண்ட மூலைகளில்
வலை பின்னியிருந்த
மூடச் சிலந்திகளை
ஒழிக்க வந்த ஒட்டடைக் கோல்
உன்னாலல்லவா அன்றி காப்பாற்றப்பட்டது
இதோ
என் வாயும் ஒரு சிலந்திதான்
வார்த்தைகளால் கவிவலை பின்னுவதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அது மாநபியை மறைப்பதற்காக
வலை பின்னியது
இது வேத நபியை வெளிப்படுத்துவதற்காக
வலை பின்னுகிறது
என் இதயமும் ஒரு தௌர் குகைதான்
அங்கே ஏந்தல் நபி எழுந்தருளி இருப்பதால்
ஆனால் ஒரு வேறுபாடு
அந்தக் குகை அவர்களை வெளியே விட்டது
இந்தக் குகையோ அவர்களை வெளியில் விடாது
இறைவா
அந்தச் சிலந்தியாய் என்னைப்
பிறக்க வைத்திருக்கக் கூடாதா?
இந்த மனிதப் பிறவியை விட
மகத்துவம் பெற்றிருப்பேனே
என் கவிதைகளை நாடு புகழ்கிறது
ஆனால்
என் கவிதைகளை விட
அந்தச் சிலந்தி வலை உயர்ந்ததல்லவா
புனிதமான சிலந்தியே
இதோ என் இதய வீட்டில்
நன்றிக் கண்ணீராலேயே
ஒரு வலை பின்னிக் கொடுக்கிறேன்
நீ இங்கே நிரந்தரமாகவே தங்கிவிடு

 

No posts

Comments

No posts

No posts

No posts

No posts