குடும்பம்'s image
9 min read

குடும்பம்

KannadasanKannadasan
0 Bookmarks 506 Reads0 Likes

குடும்பம்
பக்திமிக்க பூஜையறை காதலர்கள் பள்ளியறை
சக்தியோடு நாயகனார் தவம்புரியும் மேருமலை
அக்கரையும் இக்கரையும் அதன் நடுவே காவிரியும்
பக்குவமாய் ஓடுதல் போல் பயிலுகின்ற கல்வியறை
முற்றமது காமசுகம் முளைக்கின்ற பூமியல்ல;

மற்றுமொரு ஜீவனுக்கு வரவு சொல்ல வந்த இடம்
தம்பதிகள் உறவினிலே தாய்வயிற்றில் பிள்ளைவரம்
தாய்தகப்பன் குணம் போல சேய்க்குணம் தவழ்ந்துவரம்
ஆதலின் ஒன்றையொன்று
அநுசரித்துப் போவதுதான்
காதலிலும் இன்பம் வரும்
கண்மணிக்கும் நல்லகுணம்.

காதலில் மனைவியவள்
கருவடைந்த பின்னாலே
ஐந்துமா தம்வரைக்கும்
அழுவதென்ப தாகாது
அன்னை அழுதாலோ அலறியவள் துடித்தாலோ
அங்கம் பழுதுபட்டு அழகிழந்த பிள்ளைவரும்
கண்ணிரண்டும் கெட்டுவரும் கைகால் விளங்காது
வாய்மொழியும் தேறாது வாரிசுக்கும் உதவாது
எப்போதும் சிரித்தபடி இருக்கின்ற பெண்மயில்தான்
தப்பாமல் நல்ல தொரு தங்கமகன்(ள்) ஈன்றேடுப்பாள்
கணவன் அழகாக்க் கண்மணியை எதிர்பார்த்தால்
மனைவி மனம்நோகும் வார்த்தை சொல்லக் கூடாது.
அன்பு மொழிபேசி அரவணைத்து எந்நாளும்
தன்னையே மனைவியவள் சார்ந்திருக்கச் செய்து விட்டால்
பொன்னை வடித்த்துபோல் புத்திரர்கள் பிறப்பார்கள்!

கணந்தோறும் கணந்தோறும் கணவனையே நினைத்திருந்தால்
அவள் பெறும் ஓர் பிள்ளை என்றும் அப்பாவைப் போலிருக்கும்
ஆளான பின்னாலே ஆண்டாண்டு பொறுத்தவள்தான்
நாளாகி வயதாகி நல்லமனம் முடித்தவள் தான்.
ஆசை நிறைந்தாலும் அடக்கம் மிகுந்தவள்தான்
ஆனாலும் அந்த அழுகுமயில் வாழ்க்கையிலே
சூலான பின்னால்தான் சுகம்காணும் மயக்கம் வரும்.!
தேடும் மனையாளைத் திருப்தியுடன் வைத்திருந்தால்
கூடுகின்ற சந்ததியும் குணத்தோடு வந்துதிக்கம்.
மணவாழ்வு வாழுகையில் மறுவார்த்தை ஆகாது!
தாய்கொடுத்த சீர்வரிசை சகிக்கவில்லை! என்பதுவும்
ஜாடையாய்ப் பேசுவதும் தரம் குறைத்துக் காட்டுவதும்
அப்பன் கொடுத்த்தொரு ஆழாக்கு என்பதுவும்
வடுவாக நின்றுவிடும் வாழ்நாளில் ஆறாது
கொண்டவள்மேல் ஓர்பொழுது கோபம் வருமென்றால்
சண்டாளி சூர்ப்பனகை தாடகைநீ என்றெல்லாம்
அண்டாவில் அள்ளிவந்து அளந்துவைக்க்கூடாது
நாளைக்குப் பார்ப்போம், நடப்பதெல்லாம் நடக்கட்டும்
என்றே படுத்துவிட்டால் எழுந்திருக்கும் வேளையிலே
பெண்டாட்டி அன்புவரும் பெரிய நினைவு வரும்.
கடுகு அரிசியினைக் கற்தரையில் கொட்டிவிட்டால் மறுபடியும் திரும்பாது!
ஆழாக்கு அரிசியிட்டு அதில் வாழ்வு வாழ்ந்தாலும்
தாளாத காதலுடன் தாய்போல ஊட்டிவிட்டால்
தேவர் அமுதமெல்லாம் ‘சீ என்றே ஆகிவிடும்
வாழ்வதற்கும் தாழ்வதற்கும் மனசுதான் காரணமாம்
இன்பமென எண்ணிவிட்டால் எப்போதும் இன்பமயம்
துன்பமெனத் தோன்றினாலோ தொலையாத துன்பமயம்.

ராமனது துன்பம் இனி நமக்குவரப் போவதில்லை
சீதைபட்ட வேதனையைச் சிந்தித்தால் துன்பமில்லை!
ஆதாரம் ஒன்றையொன்று அண்டி நிற்க வேண்டுமென்றே
ஓர்தாரம் கொள்கின்றோம் உடனிருந்து வாழ்கின்றோம்.
சேதாரம் என்றாலும் சேர்ந்துவிட்ட பின்னாலே
காதோரம் அன்புசொல்லிக் கலந்திருந்தால் துன்பமில்லை!
குற்றமெல்லாம் பார்த்துக் குறை பேசத் தொடங்கிவிட்டால்
சுற்றமென ஏதுமில்லை சொந்தமென நாதியில்ல்லை!
பற்றவைத்தால் வைத்த இடம் பம்பரம் போல் ஆடிவிடும்
தள்ளிவைத்தால் தங்கதும் தவிடாக மாறிவிடும்!
கையில் அரைக் காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை
என்றிருக்கும் வேளையிலே இருப்பதையே பெரிதாக்கி
கொத்தாக்க் கீரைதனைக் கொழம்புவைத்துப் போட்டாலும்
சத்தமின்றிச் சாப்பிடுங்கள் தருவான் இறைவன்.

சண்டையிட்டு ஆவதென்ன சஞ்சலம்தான் மிஞ்சிவிடும்
அண்டை அயல்சிரிக்கு அத்தனையும் கேலிசெய்யும்.
பகலில் அக்கம்பக்கம் பார்த்தபின்னால் பேசுங்கள்,
அந்திபட்டால் எப்போதும் அதுகூடக்கூடாது
வீட்டுக் கதைகளுக்கு விபரங்கள் வேண்டுமென்றால்
கட்டாக்க் கட்டிலில் குலவுங்கள் பேசுங்கள்
பால்கணக்கோ மோர்க்கணக்கோ பட்டெடுத்த
கடைக் கணக்கோ பேசும் கணக்கெல்லாம் பிறர் முன்னால் பேசாதீர்!

தப்புக் கணக்கென்று சந்தேகம் கிளப்பாதீர்!
பெண்டாட்டி தப்பென்று பிறர்முன்னால் சொல்லிவிட்டால்
கொண்டாட்டம் ஊருக்கு கொட்டுவார் கையிரண்டை!
பால்போன்ற வேட்டியிலே பட்டகறை அத்தனையும்
பார்ப்பவர் கண்களுக்கு படம் போல தோன்றிவிடும்!
நாட்டுமக்கள் வாழ்க்கையெல்லாம் நாலும் கலந்துதான்
வீட்டுக்கு வீடு ஒரு விரிவான கதையிருக்கம்
உன்கதையைக் கேட்ட்தானால் ஊரார் அழுவதில்லை
சிலரோ சிரிப்பார்கள்; திண்டாடு என்பார்கள்
நாட்டிலா வாழுகிறோம்; நாலும் திரிந்திருக்கம்
காட்டில் உலாவுகிறோம்; கவனம் மிகத்தேவை!
எடுத்தஅடி ஒவ்வொன்றும் எச்சரிக்கையாய் விழுந்தால்
அடுத்த அடி தப்பாது ஆண்டவனார் துணையிருப்பார்!
இந்துமதப் பெண்களது எத்தனையோ துன்பங்கள்
மெளனம் எனும் தீயினிலே மாயமாய்ப் போவதுண்டு
வாய்க்கட்டு வேண்டும் என்று வகையாய் உரைப்பார்கள்!
அதற்குப் பொருளிரண்டு, ஆகாத வார்த்தைகளை
ஊரெங்கும் வீசாமல் உள்ளேவை என்பதென்று
வாய்ச்சுவையை நாடி வயிற்றைக் கெடுக்காமல்
வாய்க்கட்டு போடு என்னும் வகையான புத்தியொன்று!
பெருக்கத்து வேண்டும் பணிவென்றும் எந்நாளும்
சுருக்கத்து வேண்டும் உயர் வென்றும் சொன்னார்கள்!
வற்றாத செல்வங்கள் வளமாகச் செருகையில்
அடக்கம் பணியிருந்தால் அனைவருமே மதிப்பார்கள்!
இவ்வளவு பணமிருந்தும் எவ்வளவு பணிவென்று
ஊரார் புகழ்வார்கள் உன்னடியில் பணிவார்கள்
கையில் பணமில்லை கடனாளி யாகிவிட்டான்
என்றெல்லாம் உரார் ஏளனமாய்ப் பேசுகையில்
கைநிறைய மோதிரங்கள் கடிகாரம் சங்கிலிகள்
பட்டாடை கட்டி பவனிவர வேண்டும்நீ
அப்போது ஊறார் அதை என்ன சொல்வார்கள்
எவனோ புளுகுகிறான்; இவனா கடனாளி?
பெண்டாட்டி பேரில் பெரியபணம் வைத்துள்ளான்
என்பார்கள் நீயே இன்னுமொரு தொழில் தெய்தால்
அவரே பணம் தந்து ஆதரிக்க வருவார்கள்
நான்குபுறம் கத்தி நடுவிலொரு முள்வேலி
முள்வேலி மீதே மோகனமாய் நாட்டியங்கள்
இதுதானே வாழ்க்கை! எதற்குக் கலங்குகிறாய்?
காலத்தைப் பார்த்துக் கணக்காய்த் தொழில் தெய்தால்
ஞாலமே உன்கையில் நவின்றாரே வள்ளுவனார்
நீரில் அழுக்கிருந்தால் நீர்ருந்த மாட்டோமா?
காய்ச்சிக் குடிக்கின்றோம்; கலவைக்கு வேலையென்ன?
இடுக்கண் வருங்கால் நகு என்றொல் எந்நாளும்
அடுத்து வருவ ததுபோல் இருப்பதில்லை

சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்
இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன்.
இன்ப துன்பங்களுக்க இதுதான் நியதி என்றாள்!
கோடை வெயிலடித்துக் கொளுத்து கின்ற வேளையிலே
அம்மா மழைஎன் றவறுகிறோம், மழைவந்து
வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால்
வெய்யிலையே தெடி விடிகதிரை வணங்குகிறோம்!
கூடும் குறையும் குறைந்த்தெல்லாம் வளமாகும்
எப்போது எது நடக்கும் இறைவனுக்குத் தான் தெரியும்.
நடைபோடும் யந்திரங்கள் இவ்வுலகில் ஏதுமில்லை
போடும் நடையைப் பொடி நடையாய்ப் போடுங்கள்
நடைபோடும் வேலைதான் நாம்செய்யக் கூடுவது
பார்த்த நடந்து பக்குவமாய்த் தொடருங்கள்
அப்போதும் முதுகினிலே அடிவிழுந்தால் எல்லாமே
தப்பாத ஈசன் சாட்டை யென எண்ணுங்கள்
கண்ணீரால் எந்நாளும் கவலை மறைவதில்லை.
விண்ணாளும் வேந்தன் வீடுசெல்லும் காலம்வரை
எண்ணுவன எண்ணுங்கள் இயக்குங்கள் துன்பமில்லை.

 

No posts

Comments

No posts

No posts

No posts

No posts